பூச்சோங், 21 ஜூன் (பெர்னாமா) -- நாடு முழுவதும் உள்ள சிறு வியாபாரிகளுக்கும் தொழில்முனைவோருக்கும் குறுங்கடன் சேவையை விரிவுபடுத்தவும் எளிதாக்கவும் அரசாங்கம், ஆறு முதன்மை நிதி நிறுவனங்களின் மூலம் தொள்ளாயிரத்து 80 கோடி ரிங்கிட் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
சிறு வணிகர்கள் தங்கள் வணிகச் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான, மூலதன உதவியைப் பெறுவதிலிருந்து விடுபட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த ஒதுக்கீட்டின் நோக்கம் என்று, நிதி துணை அமைச்சர் லியூ சின் தொங் தெரிவித்தார்.
''பல வியாபாரிகள் குறுங்கடன் பெறுவதற்கு ஏதுவாக, அணுகலை மேம்படுத்தவோ அல்லது அதிகரிக்கவோ முடியும் என நம்புகிறோம். ஏற்கனவே உள்ள வசதிகளும் சிறப்பாகவே உள்ளன. மேலும், இவ்வருகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மன உறுதியை மேம்படுத்தும் என நம்புகிறேன். அதோடு, மேலும் பல விற்பனையாளர்கள் குறுங்கடன் பெறுவதற்கான வழியையும் நம்மால் கண்டறிய முடியும்,'' என்றார் அவர்.
இன்று, சிலாங்கூர், பூச்சோங், டத்தாரான் பூச்சோங் பெர்மாய், விவசாய சந்தையில் நடைபெற்ற நான்காம் தொடர் 'Mikro Kredit Turun Padang' நிகழ்ச்சியில் கலந்துகொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கீழ்நிலை வியாபாரிகளிடமிருந்து கருத்துக்களை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றை உயர் மட்டத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் நிதி அமைச்சு தற்போது ஈடுபட்டு வருவதாக லியூ மேலும் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]