விளையாட்டு

மத்திய அரசாங்கத்தின் மானியத்தைப் பயன்படுத்தி மாநில விளையாட்டு அரங்கங்களைப் புதுப்பிப்பீர்

27/02/2024 07:36 PM

புத்ராஜெயா, 27 பிப்ரவரி (பெர்னாமா) -- மத்திய அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் ஐந்து லட்சம் ரிங்கிட் உதவித் தொகையைப் பயன்படுத்தி அனைத்து மாநிலங்களில் உள்ள முதன்மை விளையாட்டு அரங்கங்களைப் புதுப்பிக்குமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு பரிந்துரைத்துள்ளது. 

நேற்று, அமைச்சர் ஹன்னா யோ தலைமையில் நடைபெற்ற, அமைச்சர் உடனான மாநில இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு ஆட்சிக்குழு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் இப்பரிந்துரை முன் வைக்கப்பட்டதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது. 

மலேசிய காற்பந்து போட்டிக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையாக இந்த விளையாட்டு அரங்க புதுப்பிப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மலேசிய காற்பந்து போட்டியின்போது காற்பந்து திடலில் நீர் தேங்கி இருப்பதையும் வெள்ளம் ஏற்படுவதையும் தவிர்ப்பதற்காக இது மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மலேசிய காற்பந்து போட்டி ஏற்பாட்டாளர்களின் கருத்துகளைப் பெற்ற பின்னர், ஒப்புதல் அளித்த அரங்கங்களைத் தீர்மானிக்க, சில அம்சங்களுக்கு மாநில அரசாங்கங்கள் உறுதியளிக்க வேண்டும் என்று அவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

திடலின் வடிகால் அமைப்பைப் புதுப்பிப்பதற்காக மூன்று லட்சம் ரிங்கிட்டையும், திடல் புற்களை மாற்றியமைக்க இரண்டு லட்சம் ரிங்கிட்டையும் பயன்படுத்துமாறு அமைச்சு அவ்வறிக்கையில் கேட்டுக் கொண்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)