பொது

பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் அருள் ராஜு

27/02/2024 07:58 PM

கோலாலம்பூர், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் புதிய தலைமை செய்தி ஆசிரியராக அருள் ராஜு துரை ராஜ் இன்று நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இதன் மூலம், பெர்னாமாவில் தலைமை செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

1991-ஆம் ஆண்டு பெர்னாமாவில் இணைந்த அருள்ராஜு விளையாட்டு செய்தி பிரிவில் தமது பணியைத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து, பேராக் மாநில பெர்னாமா பணியகத்தின் தலைவர், தாய்லாந்துக்கான பெர்னாமா செய்தியாளர், பெர்னாமா தொலைக்காட்சி செய்தி ஆசிரியர், தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்புத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்த அவர், இறுதியாக பெர்னாமாவின் பொருளாதார பிரிவுக்கான துணைத் தலைமை செய்தி ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார்.

ஊடகத் துறையில் பல ஆண்டுகள் அனுபவங்களைக் கொண்டிருக்கும் அருள்ராஜு, அந்த அனுபவங்களின் மூலமும் தம்முடன் பணிபுரியும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பின் வழியாகவும் மேலும் பல புதிய அம்சங்களைப் புகுத்தி செயலாற்றவிருப்பதாகக் தெரிவித்தார்.

''இளையோர்களைக் கவர வேண்டும் என்றால் எங்களின் படைப்பும் அப்படி இருக்க வேண்டும். அரசியல், அரசாங்கம், அண்மைய விவகாரங்களைக் கடந்து, இளம் தலைமுறையினருக்கு ஏற்றார்போல, செயற்கை நுண்ணறிவு, வாழ்வியல், பொழுதுபோக்கு போன்ற அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்போம்,'' என்றார் அவர்.

அதேவேளையில், இந்தியர் ஒருவர் பெர்னாமா தலைமை செய்தி ஆசிரியராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால், மற்ற தமிழ் ஊடகங்களுடன் பெர்னாமா மேற்கொள்ளவிருக்கும் ஒத்துழைப்பு குறித்தும் அவரிடம் வினவப்பட்டது.

''பெர்னாமாவில் தற்போது தமிழ்ச்செய்தி உள்ளது. பெர்னாமா செய்தித் தளத்திலும் தமிழ்ப் பிரிவு உள்ளது. எதிர்காலத்தில், தமிழ் இணைய ஊடகங்களுடன் ஒத்துழைப்பை மேற்கொள்வோம்,'' என்றார் அவர்.

அதோடு, பெர்னாமா பணியாளர்களின் நலனுக்கும் தாம் கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே, பெர்னாமாவின் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றிய நூர்-உல் அஃபிடா கமாலுடின் தலைமை செயல்முறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]