உலகம்

காசா போர் நிறுத்தம்; அமெரிக்கா இஸ்ரேல் இடையே விரிசல்

26/03/2024 07:07 PM

அமெரிக்கா, 26 மார்ச் (பெர்னாமா) -- காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா பாதுகாப்பு மன்றம், யு.என்.எஸ்.சி-யின் தீர்மானத்திற்கு வாஷிங்டன் எதிர்ப்பு தெரிவிக்காததைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டிருக்கும் விரிசல் தெளிவாக புலப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பின்போது வாக்களிக்காத அமெரிக்காவின் முடிவு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெத்தன்யாஹு அமெரிக்காவிற்குத் திட்டமிட்டிருந்த இரண்டு உயர்மட்ட ஆலோசகர்கள் உள்ளிட்ட பேராளர்கள் குழுவின் பயணத்தை ரத்து செய்யத் தூண்டியிருக்கின்றது.

அமெரிக்க தாக்குதல் உத்திகள் மற்றும் மாற்று வழிகளைப் பற்றி விவாதிக்க இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர் சச்சி ஹெனெக்பி மற்றும் போர் அமைச்சரவையின் உறுப்பினரும் பெஞ்ஜமின் நெத்தன்யாஹுவின் நெருங்கிய ஆலோசகருமான ரொன் டெர்மர் ஆகியோர் வாஷிங்டனுக்குப் பயணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையில் 10-வது முறையாக காசா போர் நிறுத்த தீர்மானம் எழுப்பப்பட்ட பின்னர் பெறப்பட்ட அண்மைய யு.என்.எஸ்.சி வாக்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து இந்தப் பயண ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக யு.என்.எஸ்.சி-யில் முன்வைக்கப்பட்ட ஒன்பது திட்டங்களில் ஒன்றான போர் நிறுத்தத்தை நிராகரிக்க அமெரிக்கா தமது வெட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியது.

இருப்பினும், பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான காசா போர்நிறுத்த தீர்மானம் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்டபோது அமெரிக்காவின் நிலைபாடு மாறியது.

இருப்பினும், ரஷ்யாவும் சீனாவும் காசாவில் போர் நிறுத்தத்திற்கு இணங்கவில்லை.

நேற்று நடைபெற்ற அண்மைய வாக்கெடுப்பில், 14 யு.என்.எஸ்.சி உறுப்பினர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தபோது ​​அமெரிக்கா வாக்களிக்காதது இந்த முறை தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதித்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]