பொது

வெள்ளத் தடுப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் நாட்டிற்கு நிதிச்சுமை ஏற்படும்

29/03/2024 08:32 PM

கோலாலம்பூர், 29 மார்ச் (பெர்னாமா) -- நாட்டில் வெள்ளத் தடுப்பு திட்டங்கள் தொடர்பில் தீர்வு இல்லையேல் 2030-ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜிடிபி-இல் 4.1 விழுக்காடு  வரையிலான செலவை மலேசியா ஏற்க நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.

20 ஆண்டுகளுக்குள் மிகப் பெரிய வெள்ளப் பேரிடர் ஏற்படும் என்றும், அதே நேரத்தில் அதிக இழப்புகளின் செலவை நாடு ஏற்கும் என்றும் வரலாற்றுத் தகவல்கள் காட்டுவதாக, உலக வங்கி மற்றும் பேங்க் நெகாரா மலேசியா, பிஎன்எம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வெள்ளம் என்பது நாட்டில் அடிக்கடி ஏற்படும் இயற்கைப் பேரிடராகும்.

2000-ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களில் 85 விழுக்காட்டிற்கு அப்பேரிடர் பங்களித்துள்ளதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர், ஙா கோர் மிங் தெரிவித்தார்.

''உலக அளவில் வெள்ளப் பேரிடர் எண்ணிக்கையில் மலேசியா 12-வது இடத்தில் இருந்தாலும், வெள்ளத்தால் ஏற்படும் சராசரி ஆண்டு இழப்பின் அடிப்படையில் நம் நாடு 78-வது இடத்தில் உள்ளது,'' என்றார் அவர்.

அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தினால், நாட்டில் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஙா கூறினார்.

கோலாலம்பூர் பிரிட்டிஸ் உயர் ஆணையம் ஏற்பாட்டில் சிறந்த நகர்ப்புற வெள்ள நிர்வகிப்பு  குறித்த வட்ட மேசை விவாத அமர்வில் கலந்து கொண்ட பின்னர், அவர் அத்தகவல்களை வெளியிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)