அரசியல்

எதிர்க்கட்சி வசம் இருக்கும் நாடாளுமன்ற பகுதிகளை மேம்படுத்துவதற்கே ஒதுக்கீடுகள்

04/07/2024 06:31 PM

செர்டாங், 04 ஜூலை (பெர்னாமா) -- மத்திய அரசாங்கத்திடமிருந்து எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடுகள், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருக்காக வழங்கப்படுவதில்லை.

மாறாக, எதிர்க்கட்சி வசம் இருக்கும் நாடாளுமன்ற பகுதிகளை உட்படுத்திய உள்கட்டமைப்பு, சமூக மற்றும் மக்களின் நலன் மேம்பாட்டிற்காக வழங்கப்படுவதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

''எதிர்க்கட்சிகளுக்கான இந்த ஒதுக்கீடு உண்மையில் பிரதமரின் ஒதுக்கீட்டில் வழங்கப்படுகிறது. ஒதுக்கீடு நாடாளுமன்ற பகுதிக்கானது. அது குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுகிறது என்று சொல்ல முடியாது. ஒதுக்கீட்டை ஒருங்கிணைப்பதே நாடாளுமன்ற உறுப்பினரின் பங்கு. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை,'' என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருவதாக கடந்த மே மாதம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மக்கள் நல்வாழ்வுக்காகவும் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அந்தச் செய்தியில் இடம் பெற்றிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)