பொது

தேர்தல்: அரசாங்கக் கேந்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

09/07/2024 04:04 PM

கோலாலம்பூர், 09 ஜூலை (பெர்னாமா) -- தேர்தல் காலக்கட்டத்தில் எந்தவோர் அமைச்சரோ அல்லது அரசாங்க நிறுவனமோ அரசாங்கக் கேந்திரத்தைப் பயன்படுத்தியது ஆதாரத்துடன் தெரிய வந்தால் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு, எந்த அமைச்சரோ, அரசு ஊழியரோ அல்லது அரசு நிறுவனமோ அரசாங்கக் கேந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பது அமைச்சரவையின் ஒருமித்த முடிவு என்பதால் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி பதில் நேரத்தின்போது டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.

தேர்தல் நடக்கும் பகுதியில் புதிய திட்ட அறிவிப்புகளைச் செய்வது போன்ற கலாச்சாரத்தை நிறுத்த அரசாங்கம் தயாராக உள்ளதா என்பது குறித்து இன்று மக்களவையில் Pendang நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அவாங் ஹஷிம் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்தார்.

மேலும், அரசாங்கத்தின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய அவாங் ஹஷிமிற்கு பதிலளித்த பிரதமர், 2024-இல் இருந்து 2028-ஆம் ஆண்டு வரைக்குமான என்.ஏ.சி.எஸ் எனப்படும் தேசிய ஊழல் தடுப்பு வியூகத்திற்கு ஏற்ப பொது சேவை மற்றும் அரசு தொடர்பான நிறுவனங்களின் நிர்வாகம் உட்பட நிர்வாக ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று விவரித்தார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]