பொது

புதிய புல்லுருவியான மாசுபாட்டை ஆய்வு செய்ய செயற்குழு உருவாக்கப்படும்

18/07/2024 05:07 PM

கோலாலம்பூர், 18 ஜூலை (பெர்னாமா) -- நாட்டில் மனித ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயத்தில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக் எனப்படும் நுண்நெகிழி உள்ளிட்ட புதிய புல்லுருவியாக விளங்கி வரும் மாசுபாட்டினை முழுமையாக ஆய்வு செய்ய செயற்குழு ஒன்று உருவாக்கப்படும்.

மாசினை ஏற்படுத்தும் அம்சங்களை அடையாளம் காணவும், அமலாக்கம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும் இச்செயற்குழு செயல்படும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

''தற்போதைய செயல்பாட்டு தரவிதிமுறை எதுவாக இருப்பினும் நாட்டை மாசுபடுத்தும் எவ்வகைப் புதிய பொருட்களைப் பாதுகாக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது. எனவே இவற்றை நாம் மேம்படுத்த வேண்டும். அது இச் செயற்குழுவின் கீழ் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்படும்,'' என்றார் அவர். 

மாசுபடுத்தும் பிரச்சனையை கையாள்வதில், பல்வேறு அமைச்சுகளும் ஊராட்சி மன்றங்களும் சொந்த சட்டத்தைப் பின்பற்றுவதைக் கருத்தில் கொண்டு அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் அதிகார வரம்புகளை ஒருங்கிணைக்கவும் இச்செயற்குழு அவசியம் என்று அவர் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]