பொது

போதைப் பொருள் விநியோகித்த இரு உள்நாட்டவர் கைது

18/07/2024 07:24 PM

செர்டாங், 18 ஜூலை (பெர்னாமா) -- கடந்த ஆறு மாதங்களாக கிள்ளான் பள்ளத்தாக்கின் சுற்று வட்டாரப் பகுதிகளில் போதைப் பொருளை விநியோகித்து வந்ததாக நம்பப்படும் உள்நாட்டு ஆடவர்கள் இருவர் ஜுலை பத்தாம் தேதி பூச்சோங், பண்டார் கின்றாராவில் 54 கிலோகிராம் கஞ்சா வகைப் போதைப் பொருளுடன் பிடிப்பட்டனர்.

சாலை ஓரத்தில் போதைப் பொருளை விநியோகித்துக் கொண்டிருந்தபோது, முறையே 25 மற்றும் 30 வயதுடைய அந்த ஆடவர்கள் கைதானதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. ஏ.ஏ. அன்பழகன் தெரிவித்தார்.

54,219 கிலோகிராம் எடையிலான ஒரு லட்சத்து 68,029 ரிங்கிட் மதிப்புடைய 51 கட்டிகள் அவர்கள் பயன்படுத்திய பெரோடுவா பெசா ரகக் காரை சோதனையிட்டபோது கண்டெடுக்கப்பட்டதாக ஏ.ஏ. அன்பழகன் கூறினார்.

''அப்போதைப் பொருளை விநியோகிக்க பயன்படுத்தப்பட்ட பெரோடுவா பெசா ரகக் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அப்போதைப் பொருள் அண்டை நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. இரண்டு சந்தேக நபர்களும் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பினாங்கில் விநியோகிப்பாளர்களாகச் செயல்படுவதாக நம்பப்படுகிறது," என்றார் அவர். 

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளை சுமார் ஒரு லட்சத்து 8,438 போதைப் பித்தகர்களுக்கு விநியோகிக்க முடியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

1952-ஆம் ஆண்டு போதைப் பொருள் சட்டம் செக்‌ஷன் 39B-இன் கீழ் விசாரணையைத் தொடரும் பொருட்டு, ஏழு நாள்களுக்கு இருந்த அவர்களின் தடுப்புக் காவல் ஜூலை 22-ஆம் தேதி வரை மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]