பொது

மாமன்னரின் அரியனை அமரும் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இராணுவச் சடங்குகள்

19/07/2024 05:14 PM

கோலாலம்பூர், 19 ஜூலை (பெர்னாமா) -- நாளை நடைபெறவிருக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ரஹிமின் அரியனை அமரும் விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக மலேசிய ராணுவப்படை, ஏடிஎம்-இன் மூன்று சேவைப் பிரிவுகளின் பாரம்பரியம் நிறைந்த இராணுவச் சடங்குகள் நடைபெறவிருக்கின்றன.

ஏடிஎம்-இன் உயர்மட்ட ஆட்சியாளரான மாமன்னருக்கு, நாட்டின் தற்காப்புப் படையாக அதன் விசுவாசத்தின் அடையாளமாகவும் அச்சடங்கின் முதன்மை அம்சமாகவும் ராணுவச் சடங்குகள் இடம்பெறவிருக்கின்றன.

தரை, ஆகாயம் மற்றும் கடற்படைகளைச் சேர்ந்த 377 அதிகாரிகளும் இராணுவ உறுப்பினர்களும், நாளை நடைபெறவிருக்கும் மாமன்னரின் அரியணை அமரும் சடங்கின்போது பங்கேற்றகவுள்ளனர்.

மாமன்னர், சுல்தான் மற்றும் மலாய் ஆட்சியாளர்களை வரவேற்பது மற்றும் அரச அணிவகுப்பின் தொடக்கமாக ஆயுத மரியாதையை ஏற்பதில் இருந்து ஏடிஎம்-இன் பணிகள் தொடங்குவதாக மலேசிய 12-வது ராணுவப்படை தளபதி பிரிகேடியர் ஜெனரல் முஹமட் ஃபௌசி அபு பாக்கர் தெரிவித்தார்.

அச்சடங்கில், அரச மலாய் ராணுவப் படைப்பிரிவின் முதல் படையைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

''தற்போது இஸ்தானா நெகாராவில் நடைபெறும் ஒத்திகையைப் பார்க்கும்போது, அதில் ஈடுபட்டுள்ள பெரும்பாலும் தரைப்படையைச் சேர்ந்த மூன்று சேவைப் பிரிவுகளின் ஏடிஎம் அதிகாரிகள் நாளை விழாவிற்கு தயாராகி விட்டதாக நான் நம்புகிறேன்,'' என்றார் அவர்.

இச்சடங்கின்போது 21 முறை பீரங்கி முழங்கப்படும்.

இது கோமன்வெல்த் நாடுகளில் மேற்கொள்ளப்படும் வழங்கமான நடைமுறைகளில் ஒன்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

நாளைய விழா சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்ய, கடந்த இரண்டு வாரங்களாகவே அதற்கான முழு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)