பொது

அரச மரியாதை அணிவகுப்புடன் தொடங்கியது மாமன்னரின் அரியணை அமரும் சடங்கு

20/07/2024 12:21 PM

கோலாலம்பூர், 20 ஜூலை (பெர்னாமா) -- 17ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அரியணை அமரும் சடங்கு இன்று இஸ்தானா நெகாராவில் மலேசியா ராணுவப் படை, ஏடிஎம்-இன் மூன்று சேவைப் பிரிவுகளின் பாரம்பரியம் நிறைந்த ராணுவ அரச மரியாதை வழங்கும் முழு சடங்குகளுடன் தொடங்கியது.

ஏடிஎம்-இன் உயர்மட்ட ஆட்சியாளராக மாமன்னருக்கு, நாட்டின் தற்காப்புப் படையின் விசுவாசத்தின் அடையாளமாக தரை, கடல் மற்றும் ஆகாயப்படையை உட்படுத்தி டத்தாரான் இஸ்தானா நெகாராவில் இச்சடங்கு நடைபெற்றது.

சரியாக காலை 9.45 மணிக்கு சுல்தான் இப்ராஹிமும் பேரரசியார் ராஜா சாரித் சொஃபியாவும் டத்தாரான் இஸ்தானா நெகாராவிற்கு புறப்பட்டனர்.

அவர்களுடன் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும் புறப்பட்டன.

டத்தாரான் இஸ்தானா நெகாராவைச் சென்றடைந்ததும், மேஜர் முஹமட் ஃபிக்ரி செனான் தலைமையிலான அரச மலாய் முதல் ராணுவப் படையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளும் 103 உறுப்பினர்களும் மாமன்னருக்கு அரச மரியாதை அணிவகுப்பு வழங்கினர்.

அதைத் தொடர்ந்து, அரச மலாய் முதல் ராணுவப் படை மைய இசைக்குழு 'நெகாராக்கூ' பண்ணை இசைத்தனர்.

அதோடு, மாமன்னர் அரச மரியாதை அணிவகுப்பையும் பார்வையிட்டார்.

மேலும், சுல்தான் இப்ராஹிமிற்கு மீண்டும் அரச மரியாதை வழங்கப்பட்டு 'நெகாராக்கூ' பாடல் ஒலிக்கப்பட்டது.

பின்னர், மாமன்னர் அரியணை அமரும் சடங்கைத் தொடர டத்தாரான் இஸ்தானா நெகாராவிலிருந்து ஶ்ரீ மஹாராஜா மண்டபத்திற்கு சென்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)