பொது

17-வது மாட்சிமை தங்கிய மாமன்னரின் அரியணை அமரும் விழா

20/07/2024 09:41 AM

கோலாலம்பூர், 20 ஜூலை (பெர்னாமா) -- 17-ஆவது மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிமின் அரியணை அமரும் சடங்கு, இன்று நடைபெறுகிறது.

இஸ்தான நெகாராவில் நடைபெறும் இந்த வரலாற்றுப்பூர்வ விழா, மலாய் ஆட்சியாளர்களின் முழுமையான மரபுகள் மற்றும் பாரம்பரியத்துடன் நடத்தப்படுகிறது.

இஸ்தான நெகாராவின் பாலாய்ருங் ஶ்ரீ-இல் நடைபெறும் அரியணை அமரும் சடங்கு, சுல்தான் இப்ராஹிம், ஐந்து ஆண்டுகளுக்கு மலேசிய மக்களைக் காக்கும் மகுடத்தின் குடையாக பொறுப்பேற்று நாட்டின் முதன்மைத் தலைவராக ஆட்சிப் புரிவார் என்பதை உலகிற்கு அறிவிக்கும் அதிகாரப்பூர்வ நிகழ்வாகும்.

முழுமையான மரபுகளைப் பின்பற்றி நடைபெறும் இச்சடங்கு, 1957-ஆம் ஆண்டு, நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அமல்படுத்திவரும் அரசியலமைப்பு மன்னராட்சி அமைப்பின் பாரம்பரியத்தின் தனித்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

மத்திய அரசாங்கத்தின் சிம்மாசனத்தில் முதல்முறையாக அமரும் சுல்தான் இப்ராஹிம், 1984 முதல் 1989-ஆம் ஆண்டு வரையில் எட்டாவது மாட்சிமை தங்கிய மாமன்னராக ஆட்சிப் புரிந்த காலஞ்சென்ற அவரது தந்தை சுல்தான் இஸ்கண்டர் இஸ்மாயில் நியமிக்கப்பட்ட பிறகு, ஜோகூர் சுல்தானின் இரண்டாம் தலைமுறையாக இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

அவரின் துணைவியார் மாட்சிமை தங்கிய பேரரசியார் ராஜா ஷரித் சொஃபியா-வும் இன்று அவருடன் அரியணை அமரும் சடங்கை நிறைவுச் செய்கிறார்.

மலாய் ஆட்சியாளர்கள், மாநில ஆளுநர்கள், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சரவை உறுப்பினர்கள், வெளிநாட்டு அரசதந்திர பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தேசிய தலைவர்கள் உட்பட சுமார் 700 விருந்தினர்கள் இந்த வரலாற்று விழாவில் கலந்துக் கொள்கின்றனர்.

அரச விருந்தினர்களாக புருணை சுல்தான் ஹசானல் போல்கியா மற்றும் பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமத் பின் இசா அல் கலீஃபா ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)