பொது

வங்காளதேசத்தில் உள்ள மலேசியர்களை மீட்க சிறப்பு விமானம்

23/07/2024 06:30 PM

சிப்பாங், 23 ஜூலை (பெர்னாமா) -- வங்காளதேசத்தில் நீடித்து வரும் நெருக்கடியைத் தொடர்ந்து, அங்கிருக்கும் மலேசியர்களை நாட்டிற்கு அழைத்துவர, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவில் சிறப்பு விமானம் ஒன்று இரண்டாவது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இன்று காலை மணி 7.30 மணிக்கு புறப்பட்டது.

350 பயணிகள் பயணிக்கக்கூடிய ஏர்பஸ் A330 என்ற ஏர்ஆசியா விமானம் உள்நாட்டு நேரப்படி காலை மணி 9.20க்கு டாக்காவில் உள்ள ஹஸ்ராட் ஷாஜஹல் அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்தது.

நேற்று தொடங்கி, மாணவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் டாக்காவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக வெளியுறவு அமைச்சின் தெற்காசியா மற்றும் மத்திய ஆசியா பிரிவின் செயலாளர் டத்தோ டாக்டர் ஷசெலினா சைனுல் அபிடின் தெரிவித்தார்.

''ஜூலை 12-ஆம் தேதி தொடங்கியே நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். அதை அமல்படுத்த குறுகிய காலம் அதாவது 12 மணி நேரம்தான் எடுத்தது. தூதரகத்திடமிருந்து அனுமதி கிடைத்ததும், நாங்கள் விமானத்தை தயார் செய்து விட்டோம். சற்று கால தாமதம் ஆனது. இதற்கு காரணம், நமது மாணவர்கள் டாக்காவில் உள்ள நமது தூதரகத்தை வந்தடைவதை உறுதிசெய்ய காத்திருக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது,'' என்றார் அவர்.

இக்குழுவில், விஸ்மா புத்ரா, பிரதமர் துறை, தேசிய பாதுகாப்பு மன்றம், மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா ஆகியவற்றைச் சேர்ந்த 15 பேர் ஈடுபட்டுள்ளனர்.

வங்காளதேசத்தில் மோசமடையும் கலவரத்தைத் தொடர்ந்து அங்குள்ள மலேசியர்களை திரும்ப அழைத்து வரும் செயல்முறையை விரைவுப்படுத்துமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று உத்தரவிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)