உலகம்

வங்காளதேசத்தில் போராட்டத்தினால் துண்டிக்கப்பட்ட கைத்தொலைபேசி இணைய சேவை மீண்டும் தொடரப்பட்டது

29/07/2024 03:45 PM

டாக்கா, 29 ஜூலை (பெர்னாமா) -- வங்காளதேசத்தில், அரசாங்க வேலைக்கான ஒதுக்கீடு குறித்த மாணவர்களின் போராட்டத்தினால் கடந்த 10 நாட்களாக கைத்தொலைபேசி இணைய சேவை துண்டிக்கப்பட்டிருந்த வேளையில், ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் தொடரப்பட்டது.

உள்நாட்டு நேரப்படி மாலை மணி 3-க்கு அச்சேவை வழக்க நிலைக்கு திரும்பியதாக தபால், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துணை அமைச்சர் சுனைட் அஹ்மெட் பலாக் தெரிவித்தார்.

கைத்தொலைப்பேசிக்கான இணைய சேவைக்கு வாடிக்கையாளர்கள் தாங்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அவர்களுக்கு மூன்று நாட்களுக்கு கூடுதல் 5 கீகாபைட் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட அந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தப் பின்னர், இம்மாதம் 17ஆம் தேதி கைத்தொலைப்பேசி இணைய சேவையையும் 18ஆம் தேதி அகன்ற அலைவரிசைக்கான சேவையையும் அந்நாட்டு அரசாங்கம் துண்டித்தது.

இந்நிலையில், அகன்ற அலைவரிசைக்கான சேவை கடந்த 23ஆம் தேதி மீண்டும் தொடரப்பட்டதோடு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விதிக்கப்பட்ட ஊரடங்கிலும் தளர்வு வழங்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் கடந்த 16ஆம் தேதி தொடங்கி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை அந்நாட்டு அரசாங்கம் இன்னும் வெளியிடவில்லை.

அதோடு, பள்ளிகள், கல்விக் கழகங்கள் போன்றவை இன்னும் மூடப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)