பொது

இணையத்தில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புதிய சட்டத்தில் 'KILL SWITCH' விதிகள்

29/07/2024 05:05 PM

புத்ராஜெயா, 29 ஜூலை (பெர்னாமா) -- வரும் அக்டோபர் மாதம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் இணையத்தில் பாதுகாப்பின் அளவை மேம்படுத்துவதற்கான புதிய சட்டத்தில், 'kill switch' எனப்படும் உடனடியாக அகற்றும் செயல்முறை மற்றும் அமலாக்கம் குறித்த விதிகள் விரிவாகவும் தெளிவாகவும் உட்படுத்தப்பட்டுள்ளன.

சமூக ஊடகம் மற்றும் இணைய செய்தி சேவை வழங்குநர்களுக்கு பொறுப்பைக் கொடுப்பதற்கு அச்சட்டம் வழிவகுக்கும் என்று சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.

மோசடி, இணைய மிரட்டல், குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற இணையக் குற்றங்களைக் கையாள்வதில் அவர்கள் பங்கு வகிக்க வேண்டும் என்பதற்காக அச்சட்டம் இயற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

வரும் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான பிரிவு, 2024-ஆம் ஆண்டு அனைத்துலக இணைய அச்சுறுத்தல் சட்ட மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

இதனிடையே, சமூக ஊடகம் மற்றும் இணைய செய்தி சேவை தொடர்பான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பு ஆகஸ்ட் முதலாம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி சமூக ஊடக சேவைக்கான உரிமம் நடைமுறைக்கு வரும் என்றும் அசாலினா கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)