பொது

கல்வி சான்றிதழ்கள் விற்பனையா? அமைச்சு போலீஸ் புகாரளிக்கும்

01/08/2024 04:32 PM

கோலாலம்பூர், 01 ஆகஸ்ட் (பெர்னாமா) -- நேற்று உள்நாட்டு நாளிதழ்கள் செய்தி வெளியிட்டதுபோல, பள்ளிகள் முதல் உயர்க்கல்விக் கழகங்கள் வரைக்குமான கல்வி சான்றிதழை விற்பதாக கூறப்படுவது குறித்து உயர்க்கல்வி அமைச்சு, கேபிடி உடனடியாக போலீஸ் புகார் செய்யும்.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக கண்டறியப்படும் எந்தவொரு பொது உயர்க்கல்விக் கழங்கள், தனியார் உயர்க்கல்விக் கழகங்கள் அல்லது தனிநபர் மீது கடுமையான நடவடிக்கையை எடுப்பதை உறுதிசெய்வதில் கேபிடி சமரசம் காணாது என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ப்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.

இணையம் வழியாக கல்விச் சான்றிதழை 1,500 லிருந்து 4,000 ரிங்கிட் வரை விற்கும் அக்குழு, சமூக வலைத்தளங்களில் தங்களின் நடவடிக்கையை வெளிப்படையாக விளம்பரப்படுத்தி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேலை தேடும் நோக்கத்திற்காக கல்வி தகுதியைக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள நபர்களை குறிவைத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

பொது மக்களின் புகாரின் அடிப்படையில் இதற்கு முன்னர், சில கல்வி சான்றிதழ் மோசடி சம்பவங்கள் முறியடிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

உயர்க்கல்விக் கழகங்களின் பெயரைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் இந்நடவடிக்கை இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)