உலகம்

ஹமாஸ் தலைவர் படுகொலைக்கு பொறுப்பேற்க இஸ்ரேல் மறுப்பு

02/08/2024 05:40 PM

இஸ்ரேல், 02 ஆகஸ்ட் (பெர்னாமா) -- ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மரணத்திற்கு பொறுப்பேற்க இஸ்ரேல் மறுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட அவ்வட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை முழுவதிலும் ஒரு வான்வழி தாக்குதலை மட்டுமே தங்கள் தரப்பு மேற்கொண்டதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

ஹனியே மரணத்திற்கு இஸ்ரேல் காரணம் என்று ஈரானும் ஹமாசும் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதனால், பதற்றங்கள் அதிகரித்துள்ளதோடு, ஈரான் இதற்கு பதிலடி கொடுக்கும் என்ற அச்சத்தையும் எழுப்பியுள்ளது.

ஹிஸ்புல்லா கமாண்டர், ஃபுவாட் ஷுக்ரைக் கொன்ற தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்றுள்ளது.

ஹனியே வெடிகுண்டு தாக்குதலினாலேயே கொல்லப்பட்டார் என்ற செய்திகள் குறித்து கேட்டபோது, ​​​​அன்றிரவு மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் ஒரு வான்வழித் தாக்குதலை மட்டுமே நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவத் தரப்பு பேச்சாளர் டேனியல் ஹகாரி கூறினார்.

இதனிடையே, கடந்த புதன்கிழமை ஈரான், தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் நல்லுடல் இன்று கட்டார்,
டோஹாவில் அடக்கம் செய்யப்பட்டது.

தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் ஹனியேவின் உடல் வைக்கப்பட்டு இறுதி பிரார்த்தனை நடத்தப்பட்டது.

பின்னர், அசாதி சதுக்கம் நோக்கி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டதை ஈரான் மற்றும் ஜோர்டானில் உள்ள சில தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரலையாக ஒளிப்பரப்பு செய்தன.
 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)