பொது

115 சத்தியப்பிரமாண ஆதரவு இருப்பதாக முகிடின் கூறியிருப்பதில் உண்மையில்லை - பிரதமர்

23/08/2024 06:01 PM

கோலாலம்பூர், 23 ஆகஸ்ட் (பெர்னாமா) -- தம்மிடம் 115 சத்தியப்பிரமாண ஆதரவு, எஸ்.டி இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர், டான் ஶ்ரீ முகிடின் யாசின் கூறியிருப்பதில் உண்மையில்லை.

இதற்கு காரணம், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு அல்லது மூன்று முறை எஸ்.டி-இல் கையெழுத்திட்டதால் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 15-வது பொது தேர்தலுக்குப் பின்னர், முகிடினை பிரதமராக நியமிப்பதில் அவருக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அப்போதைய மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா முடிவெடுப்பதற்கு முன்னர் அனைத்து கையொழுத்தையும் மீண்டும் பரிசோதிக்க வேண்டி இருந்ததாக பிரதமர் கூறினார்.

''எனவே, மாட்சிமை தங்கிய மாமன்னர் அரசியலமைப்பிற்கு உட்பட்டுள்ளார். நிலைமை தெளிவாகத் தெரியாதபோது, முகிடின் 115 (ஆதரவு) இருப்பதாகக் கூறினார். அன்வார் 112 (ஆதரவு) இருப்பதாகக் கூறினார். சிலர் ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறை கையெழுத்திட்டுள்ளனர். பல்வேறு கருத்துக்களைக் கொண்ட கட்சிகள் உள்ளன. எனவே, துவாங்கு (மாட்சிமை தங்கிய மாமன்னர்), தமக்கு நம்பிக்கையை ஏற்படுத்த மீண்டும் சரிபார்க்க வேண்டி இருந்தது. அதனால்தான், கூட்டரசு அரசியலமைப்பில், அவரின் (மாமன்னர்) கருத்தின்படி கண்டு, கலந்துரையாட ஆட்சியாளர் மன்றத்தை கூட்டத்திற்கு அழைத்தார்,'' என்றார் அவர்.

கம்போங் சுங்கை பென்சாலாவில் உள்ள கெர்தாக் மேரா கடையில் மதிய உணவிற்குப் பின்னர் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)