பொது

ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர் JOM இசை குழுவினர்

25/08/2024 08:33 PM

தாசேக் குளுகோர், 25 ஆகஸ்ட் (பெர்னாமா) -- இளம் வயது சிறுவர்களை கொண்ட இசைக்குழுவை உருவாக்கி, ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர் Jays Odyssey Music - JOM இசை குழுவினர்.

11 முதல் 17 வயதுக்குட்பட்ட 13 சிறார்கள் மற்றும் பதின்ம வயதினரைக் கொண்ட இந்த JOM இசை குழுவின் இளம் கலைஞர்கள், பாடுவதோடு மட்டுமின்றி, பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதிலும் திறன் படைத்திருப்பதால், Youngest Team to Form a Music Band அங்கீகாரத்துடன் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். 

நாடு தழுவிய அளவில், இணையம் வழியாக மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அதில் திறன் கொண்டவர்களை தேர்வு செய்து, நாட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜெய், இந்த JOM இசை குழுவை உருவாக்கி உள்ளார்.

தேர்வு செய்யப்பட்ட அந்த சிறுவர்களுக்கு தாம் இலவசமாக பயிற்சிகளை வழங்கி வருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், கலைத்துறையில் சிறந்து விளங்கும் இந்த இளம் இசைக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் அவர்களின் வாழ்வில் அர்த்தம் நிறைந்த ஒன்றாக அமைந்திருப்பதாகவும் ஜெய் கூறினார்.

இந்திய வடமண்டல சிகையலங்கார நிபுணர்கள் நலச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, தேசிய தின விழாவில், அங்கீகாரத்திற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன.

பினாங்கு, பிறை சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ எஸ்.சுந்தராஜூ மற்றும் வட மண்டல இந்திய சிகையலங்கார நிபுணர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.புவனேஸ்வரன் ஆகியோர், JOM இசை குழுவின் இளம் கலைஞர்களுக்கு அங்கீகாரச் சான்றிதழை வழங்கினர்.

கடந்தாண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த JOM இசை குழுவின் மாணவர்கள் திறன் அடிப்படையில், தேர்வு செய்து ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக ஜெய் கூறினார்.

மலேசியா மட்டுமின்றி, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் 600- க்கும் மேற்பட்ட இளம் கலைஞர்களுக்கு ஜெய் பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)