பொது

ஷா ஆலமில் முதலை பிடிப்பட்டது

05/09/2024 06:48 PM

ஷா ஆலம், 05 செப்டம்பர் (பெர்னாமா) -- ஷா ஆலம் தாமான் தாசிக் செக்‌ஷன் 7-இல் காணப்பட்ட முதலை, சிலாங்கூர் மாநில வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை பொருத்திய வலையில் 24 மணி நேரத்திற்குள் சிக்கியது.

நேற்றிரவு மணி 10.20 அளவில் அம்முதலை, பொருத்தப்பட்டிருந்த வலையில் சிக்கியது தமது தரப்பு மேற்கொண்ட சோதனையில் தெரிய வந்ததாக, சிலாங்கூர் தேசிய பூங்கா துறை  இயக்குநர் வான் முஹமாட் அடிப் வான் முஹமாட் யுசோ தெரிவித்தார்.

1.68 மீட்டர் நீளமும் 15-இல் இருந்து 20 கிலோ கிராம் வரையிலான எடையும் கொண்ட, உப்பு நீல் முதலை என்று அடையாளம் காணப்பட்ட அதனை தமது தரப்பு மீட்டதாக அவர் கூறினார்.

அந்தப் பொழுதுபோக்கு பகுதியை இரவில் காலி செய்து, கோழியை அம்முதலைக்கு இரையாக இட்டது, அதனை எளிதாகப் பிடிக்க முடிந்ததாக அவர் மேலும் விவரித்தார்.

சிலாங்கூர், டெங்கில், பாயா இண்டா வெட்லேன்ட்க்கு அம்முதலை அனுப்பப்பட்ட நிலையில், அதன் மூலம் எவ்வித நோயும் பரவாமல் இருப்பதை உறுதி செய்யத் தனிமைப்படுத்தும் செயல்முறைக்கு அது உட்படுத்தப்பட்டுள்ளதாக வான் முஹமாட் குறிப்பிட்டார்.

அந்த ஏரியில் வேறு முதலைகள் உள்ளனவா என்பதை உறுதிபடுத்த, சிலாங்கூர் தேசிய பூங்கா துறை அப்பகுதியை மேலும் இரு நாள்களுக்கு இரவில் மூடும் என்று அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)