அரசியல்

இளைஞர்களுக்கு அரசியல் மையம் & பெண்களின் பிரச்சனைகளைக் கேட்டறிய சேவை மையம்

08/09/2024 07:41 PM

கோலாலம்பூர், 08 செப்டம்பர் (பெர்னாமா) --  இடைநிலைக்கல்வியை முடிக்கும் தருவாயில் உள்ள மாணவர்களுக்கு அரசியல் களப் பணியைக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் மஇகா இளைஞர் பிரிவு முனைப்போடு களமிறங்க உள்ளது.

அதன் பொருட்டு அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் கட்சியின் நீண்ட நெடிய பொறுப்பாளர்களைக் கொண்டு அரசியல் மையத்தை தோற்றுவிக்கப் போவதாக கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் அர்வின் கிருஷ்ணன் தெரிவித்தார்.

"இந்த அரசியல் மையத்தை தோற்றுவிப்பதென்பது நான் இளைஞர் பகுதியில் இணைவதற்கு முன்னமே எனது நீண்ட நாள் கனவாகும். இன்றைய சூழ்நிலையில் இந்த மையத்தை அமைப்பது மிகவும் அவசியமாகும். அரசியல் ரீதியாக இளைஞர் பிரிவை எவ்வாறு வழிநடத்துவது? என்ன பேச வேண்டும், எவ்வாறு அரசியல் வியூகத்தை வகுப்பது? எவ்வாறு சமூக வலைத்தளத்தில் இதனைக் கையாளலாம் போன்ற அனைத்தும் முறையாக இதில் கற்றுத் தரப்படும்," என்று அர்வின் விவரித்தார்.

அத்திட்டம் குறித்த வரைவு முழுமைப் பெற்றுள்ளதாகவும் இவ்வாண்டு இறுதிக்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், நாடு தழுவிய அளவில் இந்திய பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து, அதற்கு தீர்வு காணும் வகையில் சேவை மையம் ஒன்றை கட்சியின் மகளிர் பிரிவுத் தோற்றுவித்துள்ளதாக அதன் தலைவர் சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார்.

"நான் கட்சியின் மகளிர் பிரிவு தலைவியாக பொறுப்பேற்றவுடன், இத்திட்டத்தை முன்னிறுத்தி துறை சார்ந்த 12 பேரை நியமித்திருந்தேன். அதில், சட்டம், கல்வி, விளையாட்டு, சமூகநலன் போன்ற பல பிரிவுகள் இடம்பெற்றிருந்தன. ஆக இவர்கள் அனைவரும் சேர்ந்து மாதத்திற்கு இருமுறை மஇகா தலைமையத்தில் ஒன்றுகூடி இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு உதவுவர்," என்று சரஸ்வதி தெளிவுபடுத்தினார்.

இதில் குறிப்பாக விவாகரத்து, தனித்து வாழும் தாய்மார்கள், வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி, சமூகநல உதவிகள் உள்ளிட்ட பல வாழ்வாதார பிரச்சனைகளுக்கு அந்தந்தத் துறைக்கான நிபுணர்களைக் கொண்டு தீர்வு காணப்படும் என்று Kemelah சட்டமன்ற உறுப்பினருமாகிய சரஸ்வதி கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)