பொது

நீரிழிவு நோயாளிகள்: தென்கிழக்காசியாவில் மலேசியா முதலிடம்

08/09/2024 07:45 PM

போர்ட் டிக்சன், 08 செப்டம்பர் (பெர்னாமா) -- நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கொண்டிருக்கும் மலேசியா தென்கிழக்கு ஆசியாவில் முதலிடத்தில் உள்ளது.

இந்த எண்ணிக்கை இந்நாட்டில் உள்ள மக்களிடையே சுகாதார குறித்த விழிப்புணர்வு குறைந்த மட்டத்தில் இருப்பதைக் காட்டுவதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

சுகாதார பிரச்சனைகள் குறிப்பாக அதிகப்படியான சீனி பயன்பாட்டு மீது மக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

''மக்களின் சுகாதார விழிப்புணர்வு இன்னும் குறைவான அளவில் உள்ளது. உடல் பருமன் என்றால் அதிக எடை, சர்க்கரை நோய் அதிகம். எனவே தயவு செய்து கொஞ்சம் கட்டுப்படுத்தி (சீனி பயன்பாடு) நம் நாட்டை காப்போம். நம் குழந்தைகளைக் காப்போம். குடும்பத்தைக் காப்போம்," என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, போர்ட் டிக்சனில் நடைபெற்ற 2024 தேசிய ஆரோக்கியமான மலேசிய மாதம் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போது அன்வார் அவ்வாறு கூறினார்.

உணவகங்களில் சீனி பயன்பாட்டைக் கண்காணித்தல் உட்பட உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே நீரிழிவு நோயாளிகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் பயனுள்ளதாக அமையும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)