பொது

8 மாதக் குழந்தைக்கு மரணத்தை விளைவித்ததாக பராமரிப்பாளர் குற்றஞ்சாட்டப்பட்டார்

13/09/2024 05:14 PM

அலோர் காஜா, 13 செப்டம்பர் (பெர்னாமா) -- தாமான் கெலெமக் உத்தாமாவில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் எட்டு மாத ஆண் குழந்தைக்கு மரணம் விளைவித்ததாக அதன் பராமரிப்பாளர் இன்று அலோர் காஜா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

அப்பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட்ட ஐந்தே நாள்களில் அக்குழந்தைக்கு மரணம் விளைவித்ததாக அப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டதாக 34 வயதான நோர் அஃபிஃபா அப்துல்லா ஷுஹய்மி தலையசைத்தார்.

எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்டிருப்பதால் அவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த செப்டம்பர் ஆறாம் தேதி, அலோர் காஜா, தாமான் கெலெமக் உத்தாமா, ஜாலான் கெலெமக் உத்தாமா 3-இல் எட்டு மாத ஆண் குழந்தையான முஹமட் அல் ஃபத்தே அம்ரி முஹமட் ஃபிக்ரி அம்ரியை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணத் தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை மற்றும் 12-க்கும் குறையாத பிரம்படிகள் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கப்படாத நிலையில், பிரேதப் பரிசோதனை, வேதியியல் மற்றும் மரபணு பரிசோதனை அறிக்கைகளுக்காக, இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை நவம்பர் 13-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]