பொது

யு.பி.எஸ்.ஆர் & பி.தி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்தும் பரிந்துரை வரவேற்கக்கூடியது

17/09/2024 06:16 PM

கோலாலம்பூர், 17 செப்டம்பர் (பெர்னாமா) -- ஆரம்பப் பள்ளிகளுக்கான யு.பி.எஸ்.ஆர் மற்றும் படிவம் மூன்று பயிலும் மாணவர்களுக்கான பி.தி. 3 தேர்வுகள் மீண்டும் அமல்படுத்தப்படலாம் எனும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பரிந்துரை குறித்துக் கடந்த சில நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த ஆலோசனைக்குப் பல தரப்பினர் ஆதரவு வழங்கியிருக்கும் நிலையில், நாட்டின் கல்விக் கொள்கையில் அடிக்கடி மாற்றங்கள் செய்வது வருத்தம் அளிப்பதாக சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் சார்பு நிலை பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ். இராஜேந்திரன் கூறுகின்றார்.

'முதலில் 2022-ஆம் ஆண்டில் இதை ரத்து செய்யப்பட்டதைத் தவிர்த்திருக்க வேண்டும். காரணம் இந்த இரு தேர்வுகளை நீக்குவதற்குத் தேசிய நிலையில் தயாராக இருக்கிறோமா என்று ஆராய்ந்திருக்க வேண்டும். இது மிகவும் வருத்தத்தைத் தரக்கூடிய செய்தி. நமக்குக் கல்வி பெருந்திட்டம் இருக்கிறது.  2013 முதல் 2025-ஆம் ஆண்டு வரையில் கல்வி பெருந்திட்டம் உருவாக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டே மாற்றங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வப்போது அரசியல் காரணத்திற்காகவோ, மற்ற காரணங்களுக்காகவோ இது போன்ற முடிவுகள் எடுக்கும் போது பாதிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன,'' என்று அவர் தெரிவித்தார்.

இருப்பினும், யு.பி.எஸ்.ஆர் மற்றும் பி.தி. 3 தேர்வுகள் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்ற பரிந்துரையை முனைவர் இராஜேந்திரன் வரவேற்றுள்ளார்.

''ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்க முடியும். அதுவும் ஒரு வெளிப்படைத் தன்மை கொண்ட தேசிய அளவிலான மதிப்பீட்டின் வழி மாணவர்களைத் தயார் செய்ய முடியும்.  எல்லாம் பாடங்களிலும் குறிப்பாக அடிப்படை பாடங்களில் மாணவர்களின் அடைவு நிலையைக் கண்காணித்து ஏற்பாடுகளைச் செய்ய முடியும். இதன் வழி மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும் என்பதே நிதர்சனம். மேலும், அண்மையில் எஸ்.பி.எம். தேர்வு எழுதாமல் போன மாணவர்கள் தொடர்பான பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும்,'' என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் புதிய பாடத்திட்டம் சீராய்வு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அதனைச் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று அவர்  முனைவர் இராஜேந்திரன் அறிவுறுத்தியிருக்கிறார்.

''தற்போது 2027-இல் இருந்து புதிய பாடத்திட்டம் சீராய்வு செய்து அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. அது ஒரு புறம் இருந்தாலும், அதில் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் தயார் நிலையை உயர்த்த வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களின் பணித் திறன் மேம்பாட்டை உயர்த்த வேண்டும். பள்ளிகளின் தலைமைத்துவம் உயர்த்தப்பட வேண்டும். ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்,'' என்று அவர் கூறினார்.

ஆரம்பப் பள்ளிகளுக்கான யு.பி.எஸ்.ஆர் மற்றும் படிவம் மூன்று பயிலும் மாணவர்களுக்கான பி.தி. 3  தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாட்டின் கல்விக் கொள்கையை மாற்றி அமைப்பதற்கான துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் பரிந்துரை, அமைச்சரவை அளவில் விவாதிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் நேற்று கூறியிருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)