பொது

அலட்சியத்தால் குழந்தைக்கு மரணம் விளைவித்த குற்றத்தை மறுத்தார் தாதி

17/09/2024 05:30 PM

கோத்தா பாரு, 17 செப்டம்பர் (பெர்னாமா) -- கடந்த வாரம், அலட்சியப் போக்கினால் ஒரு மாத ஆண் குழந்தையின் மரணத்திற்கு காரணமான குற்றச்சாட்டை, தாதி ஒருவர் மறுத்து விசாரணைக் கோரினார்.

இன்று, கோத்தா பாரு செஷன் நீதிமன்ற நீதிபதி அஹ்மட் பஸ்லி பஹ்ருடின் முன்னிலையில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை நூர் அயின் நதஷா முஹமட் சப்ரி எனும் அத்தாதி மறுத்தார்.

கோத்தா பாருவில் உள்ள மகப்பேறு மையம் ஒன்றில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அதிகாலை மணி 4.47-இல் இருந்து 5.30-க்குள், அலட்சியமாக அக்குழந்தையை விட்டுச் சென்ற சூழல் காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று நூர் அயின் நதஷா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம் செக்‌ஷன் 31 உட்பிரிவு ஒன்றின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50,000 ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

பத்தாயிரம் ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அத்தாதியை விடுவிக்க அனுமதி அளித்த நீதிமன்றம், மாதந்தோறும் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் கையெழுத்திடும்படி உத்தரவிட்டது.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)