உலகம்

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு 12 மாத சிறை

03/10/2024 06:15 PM

சிங்கப்பூர், 03 அக்டோபர் (பெர்னாமா) -- மூன்று லட்சம் சிங்கப்பூர் டாலருக்கு மேற்பட்ட மதிப்புடைய பரிசுகள் பெற்ற குற்றத்திற்காக சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் இன்று 12 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நேர்மையான நிர்வாக ஆட்சிக்கு பிரசித்திப் பெற்ற அந்நாட்டில் சுமார் 50 ஆண்டுகளில் அமைச்சரவையைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

மூன்று லட்சம் சிங்கப்பூர் டாலருக்கு மேற்பட்ட மதிப்புடைய வெகுமதி பெற்றதாக தம்மீது சுமத்தப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளையும் 13 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த எஸ்.ஈஸ்வரன் ஒப்புக்கொண்டார்.

62 வயதான ஈஸ்வரன், அடுத்த சில நாட்களுக்கு ஜாமீனில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதோடு வரும் அக்டோபர் 7-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தமது சிறைத் தண்டனையைத் தொடங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு அமைச்சரவையில் இணைந்த ஈஸ்வரன் வர்த்தகம், தொடர்பு மற்றும் போக்குவரத்து துறைகளில் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]