பொது

முன்னாள் மேலவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜி.வடிவேலு காலமானார்

19/10/2024 08:17 PM

கோலாலம்பூர், 19 அக்டோபர் (பெர்னாமா) -- முன்னாள் மேலவைத் தலைவரும் ம.இ.கா-வின் முன்னாள் பொதுச் செயலாளருமான டான் ஶ்ரீ ஜி.வடிவேலு வயது முதிர்ச்சியால் இன்று காலை மணி 11.30-க்கு மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் காலமானார்.

அவருக்கு வயது 92.

இத்துயரச் செய்தியை உறுதிப்படுத்திய ம.இ.கா-வின் உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா அன்னாரின் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

மறைந்த TAN SRI VADIVELOO-உடன் சமகாலத்தில் பணியாற்றிய மூத்த அரசியல்வாதியான Tan Sri Kumaran-உம் அன்னாரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைக் கூறினார்.

இதனிடையே, ம.இ.கா-வின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்து வாழ்ந்த அறிவாற்றல் மிக்கவர் டான் ஸ்ரீ வடிவேலு என்று, ம.இ.கா தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தமது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டினார்.

அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை நண்பகல் மணி இரண்டு தொடங்கி, Lorong Seputeh, Jalan Bukit Desa 3 என்ற முகவரியில் அமைந்துள்ள அவரின் இல்லத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், பின்னர், கோலாலம்பூர் மாநாகராண்மைக் கழக மின்சுடலையில் அவரின் நல்லுடல் தகனம் செய்யப்படும்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]