அரசியல்

முக்கியமில்லாத விவகாரங்களை ஒதுக்கினால் 16-வது பொதுத் தேர்தலில் தே.மு-க்கு அதிக வெற்றி கிட்டும்

20/10/2024 06:29 PM

கோலாலம்பூர், 20 அக்டோபர் (பெர்னாமா) -- முக்கியத்துவம் இல்லாத விவகாரங்களை ஒதுக்கிவிட்டால், அடுத்த 16-வது பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளை வெல்லும் திறனை தேசிய முன்னணி கொண்டுள்ளது.

கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையே நிலவும் பிரச்சினைகளைக் களைந்து, ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தினால், அந்த வெற்றியை அடைய முடியும் என்று தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

"தே.மு கடினமாக உழைத்தால், தேர்தல் வியூகம் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டால், ஒருவருக்கொருவர் பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து இவற்றைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தால், எதிர்க்கட்சி மாநிலங்களில் கூட, தே.மு. சிறப்பான வெற்றியைப் பதிவு செய்ய முடியும்," என்று அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூரில் நடைபெற்ற ம.சீ.ச.வின் 71-வது ஆண்டு பொதுக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போது,  டாக்டர் அஹ்மாட் அவ்வாறு கூறினார்.

மற்ற கூட்டணிகளைப் போன்று, தேசிய முன்னணியிலும் பிரச்சினைகள் நிலவினாலும், அவற்றை மறைத்து, தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

துணைப் பிரதமர் அலுவலகத்தின் கீழ், சீன சமூக முதலீட்டு ஆலோசகராக வீ கா சியோங் நியமிக்கப்பட்டிருப்பதாகவும்  டாக்டர் அஹ்மாட்  தெரிவித்தார்.

ம.சீ.ச.வின் 71-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில், தேசிய முன்னணியின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமாட் ஹசானும், ம.இ.கா. துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம்.சரவணனும் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)