பொது

தீபாவளியை முன்னிட்டு பெருநாட்கால அதிகபட்ச விலைத் திட்டத்தில் எட்டு பொருள்கள்

24/10/2024 06:17 PM

கோலாலம்பூர், 24 அக்டோபர் (பெர்னாமா) -- இறக்குமதி செய்யப்பட்ட சிவப்பு வெங்காயம், ஆஸ்திரேலிய பருப்பு உள்ளிட்ட எட்டு பொருள்கள், 2024 தீபாவளி பெருநாளுக்கான அதிகபட்ச விலைத் திட்டம், SHMMP-இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.

வரும் அக்டோபர் 28 முதல் நவம்பர் 3-ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு இத்திட்டம் அமலில் இருக்கும்.

இதைத் தவிர்த்து இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட சிறிய வெங்காயம், ரோஜா, சிவப்பு மிளகாய், இறக்குமதி செய்யப்பட்ட செம்மறி ஆட்டிறைச்சி, முழு தேங்காய், துருவிய தேங்காய்ப்பூ, தக்காளி ஆகிய பொருட்களும் இதில் உட்படுத்தப்பட்டிருப்பதாக உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

''ஒவ்வொரு முறை தீபாவளி பண்டிகை காலத்தில் முக்கிய தேவைகள் உட்பட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பொருள்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மேலும் அப்பொருளின் தேவை மற்றும் அவசியம் அறிந்து வர்த்தகர்கள் ஏற்றுக் கொள்ளும் செலவுகளின் தாக்கமும் அமைச்சு கணக்கில் கொள்ளும்,'' என்றார் அவர்.

2024 தீபாவளி பெருநாளுக்கான அதிகபட்ச விலைத் திட்டம், SHMMP தொடர்பில், கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அர்மிசான் அவ்வாறு கூறினார்.

தமது அமைச்சின் வியூகப் பங்காளிகளான, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு உட்பட அது தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினரின் கருத்துகளைக் கவனத்தில் கொண்டும் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மொத்த மற்றும் சில்லறை அளவில் நிர்ணயிக்கப்பட்ட, 2024 தீபாவளி பெருநாளுக்கான அதிகபட்ச விலைப் பட்டியலை, www.kpdn.gov.my என்ற அமைச்சின் அகப்பக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)