பொது

அனைத்து விமான நிலையங்களையும் எஸ்.பி.ஆர்.எம் கண்காணித்து வருகிறது

25/10/2024 06:32 PM

புத்ராஜெயா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- சிறப்பு முகப்புகளின் வழி வெளிநாட்டவரை நாட்டிற்குள் அழைத்து வரும் நடவடிக்கையைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் கண்காணித்து வருவதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, வெளிநாட்டினரின் முக்கிய நுழைவு வாசலாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் இருப்பதால், அங்கே அதிக கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

''நாட்டிற்குள் செல்ல வெளிநாட்டினருக்கு நுழைவாயிலாக இருக்கும் அனைத்து விமான நிலையங்களையும் நாங்கள் எப்போதும் கண்காணித்து வருகிறோம். கே.எல்.ஐ.ஏ.-இல் அந்த நடவடிக்கை மிகப்பெரியது. அதனால்தான் நாங்கள் கே.எல்.ஐ.ஏ. மீது கவனம் செலுத்துகிறோம். கே.எல்.ஐ.ஏ. வெளி தரப்புகளின் மையமாக இருப்பதால் இங்கே நாம் கவனம் செலுத்துகிறோம். ஜோகூரிலும் நுழைவு முகப்புகள் உள்ளன. ஆனால் கே.எல்.ஐ.ஏ.-இல் அதிக முகப்புகள் உள்ளன,'' என்று அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டினர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழையச் சிறப்பு முகப்புகளை ஏற்பாடு செய்த அதிகாரிகளின் நடவடிக்கை அம்பலமாகியதைத் தொடர்ந்து, குடிநுழைவுத் துறை மேற்கொள்ளும் சோதனை மூலம் அனைத்து மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அசாம் பாக்கி விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)