பொது

பொழுது போக்கு மையத்தில் ஐந்து பெண்கள் உட்பட 11 தென் கொரியப் பிரஜைகள் கைது

25/10/2024 06:47 PM

கோலாலம்பூர், 25 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று கோலாலம்பூரில் உரிமம் இல்லாத பொழுது போக்கு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப் கெகார் (OP GEGAR) சோதனை நடவடிக்கையில், ஐந்து பெண்கள் உட்பட 11 தென் கொரிய பிரஜைகளை, கோலாலம்பூர் மலேசிய குடிநுழைவுத்துறை, ஜே.ஐ.எம் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், அதில் பெண் ஒருவர் பொழுது போக்கு மையத்தின் நிர்வாகி என்று நம்பப்படுவதாகவும், அதன் இயக்குநர் வான் முஹமாட் சௌபி வான் யூசோப் தெரிவித்தார்.

இந்தப் பொழுதுபோக்கு மையம் கொரியப் பிரஜைகளுக்குப் பிரத்தியேகமாகச் செயல்படுவதாக நம்பப்படும் நிலையில், உணவகம் போன்று செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அதோடு, இதில் கொரியா மொழியில் KARAOKE சேவைகள் வழங்கப்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் தொலைப்பேசி வழி முன்கூடியே பதிவு செய்து கொள்ளும் வசதிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு வார உளவு நடவடிக்கைக்குப் பின்னர், இன்று அதிகாலை ஒரு மணியளவில் சோதனை நடத்தப்பட்டது.

கதவைத் திறக்க சம்பந்தப்பட்ட கடையைச் சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு வழங்க மறுத்ததால், தங்களது தரப்பு கதவை உடைத்து உள்ளே நுழைந்ததாக வான் முஹமாட் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)