பொது

பிரிக்ஸில் மலேசியா இணைவதற்கான எத்தியோப்பியாவின் ஆதரவை அரசாங்கம் மதிப்பளிக்கின்றது

26/10/2024 05:51 PM

புத்ராஜெயா, 26 அக்டோபர் (பெர்னாமா) -- பிரிக்ஸ் அமைப்பில் மலேசியா ஒரு பங்காளி நாடாக இணைவதை உறுதி செய்ய, எத்தியோப்பியா வழங்கியிருக்கும் முழு ஆதரவுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கின்றது.

அனைத்துலக வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கை அளிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பில், மலேசியாவின் விண்ணப்பத்தை தீர்மானிக்கும் முதன்மை பங்காளி நாடுகளில், எத்தியோப்பியாவும் ஒன்று என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

''அவர் பிரிக்ஸ் கூட்டத்திற்குப் பின்னர் வந்திருக்கின்றார். அரசாங்கத்தின் சார்பாக நான் மீண்டும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், எனது சந்திப்பிற்கு முன்னதாகவே நாங்கள் அவருடன் தொடர்பு கொண்டுள்ளோம். அவர் ஒரு முக்கிய புள்ளி. பிரிக்ஸின் முக்கிய உறுப்பினர். பிரிக்ஸ் அமைப்பில் பங்கு வகிக்க மலேசியாவுக்கு அவர்கள் முழுமையான ஆதரவை வழங்கினர்,'' என்றார் அவர்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற எத்தியோப்பிய பிரதமர் டாக்டர் அபிய் அஹ்மட் அலி உடனான செய்தியாளர்கள் சந்திப்பில் அன்வார் அவ்வாறு கூறினார்.

கடந்த வியாழக்கிழமை பிரிக்ஸில், அதிகாரப்பூர்வமாக இணைந்த புதிய 13 நாடுகளில் மலேசியாவும் இடம் பெற்றுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)