Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

டிரம்ப்: மெக்சிக்கோ & ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் 30 விழுக்காடு வரி

13/07/2025 05:24 PM

வாஷிங்டன், 13 ஜூலை (பெர்னாமா) -- பல வாரங்களாகத் தோல்வியடைந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஆகஸ்ட் முதலாம் தேதி தொடங்கி  மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.

அமெரிக்க நட்பு நாடுகளைக் கோபப்படுத்திய மற்றும் முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வர்த்தகப் போரின் தீவிரத்தில் டிரம்ப், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன்டெர் லாயன் மற்றும் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் ஆகியோருக்கு தனித்தனி கடிதங்களின் வழி வரி விதிப்பு அறிவிப்பை  தமது சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இரண்டு மிகப்பெரிய வர்த்தகப் பங்காளி நாடுகளான ஐரோப்பிய ஒன்றியமும் மெக்சிகோவும், பரிந்துரைக்கப்பட்ட கட்டணங்களை நியாயமற்றவை மற்றும் சீர்குலைக்கக்கூடியவை என்று தெரிவித்துள்ளன.

ஆனால், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னர் ஒரு பரந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர அந்நாடுகள் உறுதி கொண்டுள்ளன.

கனடா, ஜப்பான் மற்றும் பிரேசில் உள்ளிட்ட 23 வர்த்தக பங்காளிகளுக்கு இதேபோன்ற கட்டண அச்சுறுத்தல் கடிதங்களை டிரம்ப் அனுப்பியுள்ளார்.

20 முதல் 50 விழுக்காடு வரையிலான மொத்த கட்டணங்களையும், தாமிரத்திற்கு 50 விழுக்காடு வரியையும் அவர் பரிந்துரைத்தார்.

அந்த 30 விழுக்காட்டு வரி, ஏற்கனவே உள்ள துறைசார் வரிகளுக்கு அப்பாற்பட்டவை.

அதாவது, எஃகு மற்றும் அலுமினியம் மீதான 50 விழுக்காட்டு வரிகளும், வாகன இறக்குமதிக்கான 25 விழுக்காட்டு வரியும் தொடர்ந்து அமலில் இருக்கும்.

ஆகஸ்ட் முதலாம் தேதி வரைக்குமான காலக்கெடு, இலக்கிடப்பட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தப்பட்ட கட்டணங்களைக் குறைக்கக்கூடிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பளிக்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)