கோலாலம்பூர், 25 ஜூலை (பெர்னாமா) -- ரஹ்மா அடிப்படை உதவி அல்லது SARA திட்டத்தின் கீழ் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களுக்கான நூறு ரிங்கிட் தொகை, மைகார்ட் அட்டையின் மூலம் நேரடியாக வழங்கப்படும் என்று நிதி அமைச்சு மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,100 கடைகளில், அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு பணம் செலுத்த பயனீட்டாளர்கள் தங்களின் மைகார்ட் அட்டையை உடன் கொண்டு வர வேண்டும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது ரொக்கமற்ற பணம் செலுத்தும் முறை என்றும், கட்டணம் செலுத்த தனிநபரின் மைகார்ட் அட்டை மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதோடு, இதில் Touch ‘N Go பயன்பாடு உட்படுத்தப்படவில்லை.
அரிசி, முட்டை, சமையல் எண்ணெய், பள்ளி பொருட்கள் மற்றும் மருந்துகள் உட்பட 90 ஆயிரம் பொருட்களை உள்ளடக்கிய 14 வகை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைத் தேவைகளுக்கு இந்த நூறு ரிங்கிட் உதவியைப் பயன்படுத்தலாம்.
நூறு ரிங்கிட்டில் எஞ்சியிருக்கும் தொகையை இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)