அலோர் ஸ்டார், 26 மே (பெர்னாமா) -- கடந்த மே 17-ஆம் தேதி பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் ஒருவரை, 30 நாள்களுக்கு பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு அனுப்ப அலோர் ஸ்டார் செஷன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்ட முஹமட் இல்ஹமி படாருடின் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வருவதாக, அவரின் வழக்கறிஞர் முஹமட் ஹகிம் ஹம்ரான் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிபதி என்.பிரிசில்லா ஹெமமாலினி அவ்வாறு உத்தரவிட்டார்.
தாம் எதிர்கொள்ளும் மனநலப் பிரச்சனைகளுக்குச் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் வழக்கமாக மேற்கொள்ளும் சிகிச்சை அட்டையையும் குற்றம் சாட்டப்பட்டவர் வைத்துள்ளதாக வழக்கறிஞர் முஹமட் ஹகிம் தெரிவித்தார்.
பினாங்கு கெப்பாலா பத்தாஸ், ஷேக் பிஸ்ட்ரோ திதி காஜாவில் உள்ள உணவகம் ஒன்றின் முன்புறத்தில், நுருல் ஹுஸ்னா கஸ்மனி எனும் பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முஹமட் இல்ஹமி முன்னதாக மறுத்து விசாரணை கோரியிருந்தார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 307 உட்பிரிவு ஒன்றின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
மேலும் இச்செயலால் பாதிக்கப்பட்டவருக்குக் காயம் ஏற்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஜூலை 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)