Ad Banner
Ad Banner
 பொது

ஜோகூர் - நெகிரி செம்பிலான் தேர்தல்கள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய போலீஸ் தயார்

15/06/2026 04:21 PM

புத்ராஜெயா, 15 ஜூன் (பெர்னாமா) -- ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய போலீஸ் தயாராக உள்ளது.

இரு மாநிலங்களிலும் தேர்தல் செயல்முறைகள் சுமுகமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் காலீட் இஸ்மாயில் தெரிவித்தார்.

''ஜோகூர் மாநிலத்திற்கு மட்டும் சுமார் 4,000 முதல் 5,000 வரையிலான பி.டி.ஆர்.எம்-இன் மனிதவள உதவி தேவைப்படுவதாக நான் அறிகிறேன். ஜோகூர் மாநிலம் மிகவும் பரந்தது என்பதோடு, அங்கு 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே, நிர்ணயிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளையும், வாக்குப்பதிவு வழிகளையும் நாங்கள் கண்காணித்துப் பாதுகாப்போம்'', என்றார் அவர். 

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அந்தந்த மாநிலங்களின் தேவையைப் பொறுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலுமிருந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைப் பணியமர்த்த தங்கள் தரப்பு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜோகூர் மாநிலத் தேர்தல் ஜூலை 11-ஆம் தேதியும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் ஆகஸ்ட் முதலாம் தேதியும் நடைபெறும் என்று முன்னதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.


-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)