பூச்சோங், 09 ஜூன் (பெர்னாமா) -- ஏறத்தாழ 14 ஆண்டுகால முயற்சிகளுக்கு பலனளிக்கும் வகையில், மாற்று இடத்தில் புதிய பள்ளியை நிறுவுவதற்கான கல்வி அமைச்சின் முழு அனுமதியை சிலாங்கூர், பூச்சோங், காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி பெற்றிருக்கிறது.
அதற்கான அனுமதி கடிதத்தை கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ இன்று பள்ளி மேலாளர் வாரியத்திடம் வழங்கினார்.
''இன்று, காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியின் முழுமையான மாற்று இடத்திற்கான கல்வி அமைச்சின் அனுமதியை வழங்கினோம். சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் அப்புதிய இடம் இப்பள்ளிக்காக அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இக்கட்டுமானத் திட்டம் பள்ளி நிர்வாகம், பிரசாரானா, டி.எம்.ஐ.ஏ நிறுவனத்தின் ஒத்துழைப்பில் மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார் அவர்.
பிரசாரானா நிறுவனம் மேற்கொண்ட மேம்பாட்டு திட்டம் காரணமாக பாதிப்படைந்த காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியின் கல்வி சூழலை தொடர்ந்து, அதற்கான இழப்பீடாக இரண்டு கோடி ரிங்கிட் நிதியை அந்நிறுவனம் வழங்கியதாக வோங் கா வோ கூறினார்.
அதேவேளையில், டி.எம்.ஐ ஏ (DMIA) மேம்பாட்டு நிறுவனம் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பாக ஒரு கோடியே 60 லட்சம் ரிங்கிட் நிதியை வழங்கியதன் வழி மொத்தம் மூன்று கோடியே 60 லட்சம் ரிங்கிட் நிதியில் அதிநவீன புதிய தமிழ்ப்பள்ளியாக இப்பள்ளி உருவெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 150 கூடுதல் மாணவர் பதிவை பெறும் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி, இடப்பற்றாக்குறையினால், அப்பதிவை நிராகரிக்க வேண்டிய சூழல் நேர்ந்ததாக பள்ளியின்மேலாளர் வாரியத் தலைவர் குமார் சுப்ரமணியம் தெரிவித்தார்.
அதேவேளையில், இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு, ஏ.ஐ உட்பட திவெட் தொழில்கல்விக்கும் இப்புதியப் பள்ளி முக்கியத்துவம் அளிக்கும் என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கியுள்ள 6 ஏக்கர் நிலத்தில் 36 வகுப்பறைகள் கொண்ட இப்புதிய பள்ளி தற்போது உள்ள பள்ளியிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் நிறுவப்படவுள்ளதாக, அப்பள்ளியின் தலைமையாசிரியை உஷா தேவி சேகரன் குறிப்பிட்டார்.
2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்புதிய பள்ளியின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2029-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலர் பள்ளியில் 50 மாணவர்கள் உட்பட இப்பள்ளியில் மொத்தம் 760 மாணவர்கள் தற்போது பயின்று வருகின்றனர்.
இன்று, சிலாங்கூர், பூச்சோங், காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், பள்ளி மேலாளர் வாரியத்தினர், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் என சுமார் 70 பேர் கலந்து கொண்டனர்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]