ஜார்ஜ் டவுன், 15 ஜூன் (பெர்னாமா) -- மடானி அரசாங்க நிர்வாகத்தின் கீழ் சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் எதுவும் மூடப்படாது என்று கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.
தேசிய கல்வி அமைப்பின் ஒரு பகுதியாக, நாட்டில் அனைத்து வகை பள்ளிகளும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்நிலைப்பாடு பிரதிபலிப்பதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ கூறினார்.
மாணவர் எண்ணிக்கை குறைதல், பள்ளிக்கான இடம் தொடர்பான சவால்கள் என தாய்மொழிப் பள்ளிகளின் எதிர்காலம் குறித்து சீன மற்றும் இந்திய சமூகத்தினர் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் கவலைகளை அரசாங்கம் புரிந்துகொள்வதாக வோங் கா வோ தெரிவித்தார்.
இன்று, பினாங்கில் ராஜாஜி தமிழ்ப்பள்ளிக்கு புதிய கட்டிடத்திற்கான கட்டுமான அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் அது தொடர்பில் விளக்கம் அளித்தார்.
கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், தாய்மொழிப் பள்ளிகள் நமது கல்வி அமைப்பின் ஒரு முக்கிய அங்கம் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளார். மடானி அரசாங்க நிர்வாகத்தின் கீழ், சீனம் அல்லது தமிழ் என எந்தப் பள்ளியும் மூடப்படாது என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். தற்போதுள்ள அனைத்துப் பள்ளிகளையும் நாங்கள் பாதுகாப்போம்.
இந்த உறுதிமொழி, பள்ளி நிர்வாக வாரியங்கள், கல்வியாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் எனவும் வோங் நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வி அமைச்சு, அனைத்து வகை பள்ளிகளின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும், எந்த பின்னணியையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மாணவரும் தரமான கல்வியை பெறுவதை அரசாங்கம் உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
-பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)