கோலாலம்பூர், 20 ஜூன் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், துர்க்மெனிஸ்தானுக்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ அலுவல் பயணம், குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும் வியூக ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளது.
பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு துறைகளில், குறிப்பாக எரிசக்தித் துறையில், இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் புதியதோர் அத்தியாயத்தை அப்பயணம் தொடக்கி வைத்துள்ளதாக, பிரதமர் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதோடு, மலேசிய பேராளர் குழுவினருக்கு அன்பான விருந்தோம்பலை வழங்கிய துர்க்மெனிஸ்தான் அதிபர் செர்டார் பெர்டிமுஹமெடோவ் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அன்வார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஒவ்வொரு பரிவர்த்தனையும் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றிய அமைச்சின் பணியாளர்கள், அஷ்கபாட்டில் உள்ள மலேசியத் தூதரகம், பெட்ரோனாஸ், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் பிரதமர் நன்றி கூறினார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் பத்தாவது பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து துர்க்மெனிஸ்தானுக்கு அன்வார் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]