பத்து காவான், 20 ஜூன் (பெர்னாமா) -- அமெரிக்காவைத் தளமாக கொண்ட எம்.கே.எஸ் Instruments நிறுவனம், மலேசியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நடவடிக்கை, நாட்டின் வளர்ந்து வரும் மின்னியல் உபரிப்பாக தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பச் சூழலமைப்பில் முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு சான்றாக விளங்குகிறது.
அதோடு, மலேசியா முற்றிலும் கீழ்நிலை மின்னியல் உபரிப்பாக செயல்பாடுகளிலிருந்து, உயர் மதிப்புள்ள உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு மாறும் முயற்சிகளுக்கும் அந்த முதலீடு ஆதரவளிப்பதாக
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எடுத்துரைத்தார்.
''முதலமைச்சருக்கும் பினாங்கில் உள்ள நண்பர்களுக்கும் என் வாழ்த்துகள். உங்களுக்குத் தெரியும், நான் சற்று ஒருதலைப்பட்சமாகப் பேசக்கூடியவன். ஆனால் இது, கொள்கையில் தெளிவு, நிர்வாகத்தில் செயல்திறன், தேவையற்ற அதிகாரத்துவ விதிகளைக் குறைத்தல், மற்றும் நாம் செய்ய வேண்டியவற்றில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றைக் காட்டுகிறது. அதை செய்ய முடியும் என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள்,'' என்றார் அவர்.
இன்று, பினாங்கு, பத்து காவானில் நடைபெற்ற எம்.கே.எஸ் Instruments நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர் அவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, முதலீட்டுச் சூழலை மேலும் வலுப்படுத்தவும், தொழில்துறை வளர்ச்சியை விரைவுப்படுத்தவும் மலேசியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்துக் கருத்துகளை வழங்கவும், ஒரு முறைசாரா ஆலோசகராக எம்.கே.எஸ் Instruments நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜோன் டி.சி. லீ பணியாற்றுவார் என்றும் அன்வார் அறிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]