பட்டர்வெர்த், 20 ஜூன் (பெர்னாமா) -- முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி, டான் ஶ்ரீ நளினி பத்மநாதன் மலேசிய ஊடக மன்றம், எம்.எம்.எம்-வின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, அந்த அமைப்புக்கு புதிய நற்பெயரையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நளினியின் நியமனம் மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட்டதாக கூறிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நீதித்துறையில் சிறந்த பின்னணி, அனுபவம் மற்றும் உயர்ந்த நேர்மையைக் கொண்ட ஒருவரே இப்பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விவரித்தார்.
''அவரது நியமனத்தின் மூலம், இந்த ஊடக மன்றம் மேலும் தீவிரமாகச் செயல்படுகிறது என்ற தோற்றம் ஏற்படும். நீதித்துறையில் பின்னணியும் சாதனைகளும் கொண்ட, சுதந்திரம் மற்றும் நேர்மையுள்ள ஒருவர் இணைவது, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு தகுதியாக அமைகிறது. இது மலேசிய ஊடக மன்றத்திற்கு நற்பெயரையும் நம்பிக்கையையும் அளிக்க உதவும்,'' என்றார் அவர்.
இன்று, பினாங்கு, பட்டவெர்த்தில் ஹவானா 2026 கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றிய டத்தோ ஶ்ரீ அன்வார் அதனைக் கூறினார்.
மே 26-ஆம் தேதி, நடைபெற்ற கூட்டத்தில், மலேசிய ஊடக மன்ற வாரிய உறுப்பினர்களால் நளினியின் நியமனம் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இதனிடையே, Tabung Kasih@HAWANA-வுக்கு கூடுதலாக10 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
''இன்றுவரை, நாடு முழுவதும் உள்ள 773 ஊடகப் பணியாளர்கள் மொத்தம் 22 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகையைப் பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் காரணமாக, கருணை மற்றும் அன்பின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டிற்காக Kasih@HAWANA நிதிக்கு (கூடுதலாக) 10 லட்சம் ரிங்கிட்டை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்,'' என்றார் அவர்.
நாட்டில் உள்ள ஊடகவியலாளர்களின் நலனுக்கான தொடர்ச்சியான ஆதரவின் அடையாளமாக இந்த நிதி வழங்கப்படுவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]