Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

முதலீட்டு மோசடி கும்பல்களின் வலையில் சிக்குவதற்கு பேராசையும் முக்கிய கா

20/06/2026 02:36 PM

கோத்தா பாரு, 20 ஜூன் (பெர்னாமா) -- பேராசையும் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணமுமே, கிளந்தான் மாநிலத்தில், அதிகமானோர் முதலீட்டு மோசடி கும்பல்களின் வலையில் சிக்குவதற்கு முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் இத்தகைய மோசடி நடவடிக்கைகளால் ஏற்பட்ட இழப்பு, 51 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் என்று கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் யூசோஃப் மாமாட் கூறினார்.

இதர வணிகக் குற்றங்களுடன் ஒப்பிடுகையில், அங்கு முதலீட்டு மோசடி அதிக அளவு இழப்புகளைப் பதிவு செய்துள்ளதாக கூறிய டத்தோ முஹமட் யூசோஃப், அதில் தனிப்பட்ட முறையில் பலர் 10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்துள்ளதாகவும்  தெரிவித்தார். 

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், அதிக லாபம் கிடைக்கும் என்ற மோசடி கும்பல்களின் வாக்குறுதிகளை நம்பி, அவர்கள் வழங்கிய முதலீட்டுத் திட்டங்களில் தொடர்ந்து பணத்தைச் செலுத்தியுள்ளனர்.  

பின்னர், தங்கள் இழப்புகள் லட்சக்கணக்கான ரிங்கிட் தொகையை எட்டிய பின்னரே அவர்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளனர்.

''முதலீட்டு வழக்குகளில், இழப்புகளின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது. கிளந்தானில் 10 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிகமான இழப்புகளைச் சந்தித்தவர்கள் உள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்கள், வாக்குறுதி அளிக்கப்பட்ட லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுவாகப் பலமுறை பணத்தை செலுத்துகிறார்கள். அவர்களில் சிலர், தங்களது இழப்பு  நூறாயிரக்கணக்கான ரிங்கிட் அல்லது 10 லட்சம் ரிங்கிட் ரிங்கிட்டிற்கும் அதிகமாக ஆன பின்னரே, ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள்,'' என்றார் அவர். 

மோசடி கும்பல்கள் பொதுவாக முதலீட்டாளர்களை கவர்வதற்காக நியாயமற்ற அளவில் அதிக லாபம் கிடைக்கும் என்ற வாக்குறுதிகளை வழங்குவதாக முஹமட் யூசோஃப் அண்மையில் பெர்னாமாவிடம் தெரிவித்தார். 

--பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]